கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் குவியல், குவியலாக கிடந்த காலாவதியான தின்பண்ட பாக்கெட்டுகள் மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் காலாவதியான தின்பண்ட பாக்கெட்டுகள் குவியல், குவியலாக கொட்டிக் கிடந்தது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-22 16:33 GMT

கடலூர், 

தின்பண்டங்கள்

கடலூர் ஜவான்பவன் புறவழிச்சாலையில் உள்ள முதியோர் இல்லம் அருகே கெடிலம் ஆற்றங்கரையோரம் நேற்று 10-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் கிடந்தது. சற்று நேரத்தில் அந்த பெட்டியில் இருந்த சிறுவர்கள் சாப்பிடும் தின்பண்ட பாக்கெட்டுகளை 2 பேர் குவியல், குவியலாக கொட்டி விட்டு, அட்டை பெட்டிகளை எடுத்துச்சென்று விட்டனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, இது பற்றி மாநகராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

கொட்டியது யார்?

அப்போது அந்த பாக்கெட்டுகள் அனைத்தும் காலாவதியான தின்பண்டங்கள் என்று தெரிந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அவர்கள், அந்த தின்பண்ட பாக்கெட்டுகளை கெடிலம் ஆற்றங்கரையோரம் கொட்டியது யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அந்த வழியாக செல்லும் சிறுவர்கள் யாரேனும் பார்த்து எடுத்து சாப்பிட்டு இருந்தால், பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

ஆகவே இது போன்ற நிலையை தவிர்க்க வேண்டும். காலாவதியான பொருட்களை பொது இடத்தில் கொட்டுவதை தவிர்த்து, பாதுகாப்பான முறையில் கடைக்காரர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்