2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை செலுத்த நாளை வரை அவகாசம் - தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு

2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) செலுத்தும்படி தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-01-30 02:46 GMT



சென்னை,

தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியச் சட்டப்படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்காக ரூ.20 மற்றும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40 சேர்த்து, மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதியாக செலுத்த வேண்டும்.

2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வரும் ஜன.31-க்குள் செலுத்த வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை ஏதும் இருந்தால், அதை ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிட்டு, வாரியத்துக்கு அந்த தொகையை செலுத்த வேண்டும்.

ஆண்டில் 30 நாட்களுக்கு மேல் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களுக்கும், நல நிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார். தொழிலாளர் நல நிதி செலுத்தத் தவறினால், வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) தொழிலாளர் நல நிதி தொகையை, செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600006 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்