சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு:தூத்துக்குடி கடலில் போலீசார் படகில் தீவிர ரோந்து

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி கடலில் போலீசார் படகில் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

Update: 2023-08-14 18:45 GMT

தூத்துக்குடியில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு போலீசார் படகில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திர தினவிழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா மாவட்ட விளையாட்டு அரங்கில் கொண்டாடப்படுகிறது. விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு காலை 9.10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று அனல்மின்நிலையம், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்தனர். அதே போன்று ரெயில் வழித்தடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 20 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கண்காணிப்பு

மேலும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் படகுகளில் சென்று கண்காணித்தனர். சந்தேகப்படும்படியாக ஏதேனும் படகுகள் வருகிறதா, மீன்பிடி படகுகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளில் அந்நியர்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் கண்காணித்தனர். மீனவ கிராமங்களிலும் போலீசார் ரோந்து சென்று, சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறி உள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்