பழங்குடியின தொழிலாளியை தாக்கிய புலி

பேச்சிப்பாறை அருகே ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது. பழங்குடியின தொழிலாளியை தாக்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2023-07-30 18:45 GMT

குலசேகரம்:

பேச்சிப்பாறை அருகே ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது. பழங்குடியின தொழிலாளியை தாக்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

புலியை பிடிக்கும் பணி நிறுத்தம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மோதிரமலை மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாடு, ஆடுகளை கடித்துக் கொன்று புலி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

கடந்த 3-ந் தேதி முதல் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதற்கிடையே வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும், புலியை பிடிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற்ற எலைட் படையை அனுப்பியும் தீவிரமாக கண்காணித்தனர். டிரோன் கேமரா மூலம் புலியின் நடமாட்டம் இருக்கிறதா? எனவும் கண்காணிப்பு பணி இருந்தது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக புலியின் நடமாட்டம் தென்படவில்லை. இதனால் புலி அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என பொதுமக்கள் நினைத்தனர். அதே சமயத்தில் வனத்துறையும் புலியை தேடும் பணியை நிறுத்தியதோடு எலைட் படையையும் வாபஸ் பெற்றது.

மீண்டும் அட்டகாசம்

எனினும் வனத்துறையினர் சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர். அப்போது, புலியின் நடமாட்டம் தற்போது இல்லையென்றாலும் இரவு 8 மணிக்கு மேல் மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இந்நநிலையில் நேற்று அந்த பகுதியில் புலி தாக்கியதாக தொழிலாளி ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

தொழிலாளியை தாக்கியது

அதாவது மோதிரமலை மூக்கறைக்கல் குடியிருப்புக்கு சற்று அருேக உள்ள மோதிரமலை வேலிப்பிலாம் என்ற பகுதியை சேர்ந்த பழங்குடியின தொழிலாளி சிவகுமார் (வயது 43) நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டின் அருகில் உள்ள ரப்பர் மரங்களில் பால்வடிக்கும் பணிக்காக அங்குள்ள சிமெண்டு சாலை வழியாக கையில் கத்தியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேடான பகுதியில் இருந்து திடீரென ஒரு விலங்கு சிவகுமார் மீது பாய்ந்து தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றது.

இதில் சிவகுமாரின் கையில் நகக்கீறல் காயம் ஏற்பட்டது. மேலும் அவர் கீழே விழுந்ததில் தலை மற்றும் கை உள்ளிட்ட இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டன.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்னர் சிவகுமாரின் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் அங்கு வந்து அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக தொழிலாளி சிவகுமார் கூறுகையில், ஒரு பெரிய விலங்கு என்னை தாக்கி விட்டு தப்பியது. அது புலி போலத்தான் இருந்தது. புலியின் நகங்களால் என் கையில் கீறல் காயமும் ஏற்பட்டுள்ளது என்றார்.

பொதுமக்கள் அச்சம்

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர், வனவர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று புலியின் கால் தடம் ஏதும் பதிவாகியிருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பழங்குடியின தொழிலாளி சிவகுமாரை ஏதோ ஒரு வன விலங்கு தாக்கி விட்டு மறைந்துள்ளது. அந்த விலங்கு புலியாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளன. அந்த இடத்தைச் சுற்றி பார்த்த போது புலியின் கால்தடங்கள் தென்படவில்லை என்றனர். இதுவரை ஆடு, மாடுகளை கொன்ற நிலையில் தொழிலாளியை புலி தாக்கியதாக கூறப்பட்ட சம்பவத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்

புலி தாக்கியதில் காயமடைந்த சிவகுமார் வேதனையில் வலியால் துடித்தார். அதே சமயத்தில் அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்ல வந்த ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக மோதிரமலை மற்றும் வேலிப்பிலாம் குடியிருப்பு மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பழங்குடி தொழிலாளியான சிவகுமாரை தாக்கியது புலியாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம். எனவே வனத்துறையினர் புலியிடமிருந்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும். மேலும் பேச்சிப்பாறையில் இருந்து இயக்கப்பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சமீபகாலமாக இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒவ்வொரு தேவைகளுக்கும் குலசேகரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டியுள்ளது. இதனால் அவசரமாக நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்