அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாத செயல் -அண்ணாமலை பேட்டி

அமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பத்தகாத செயல் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் கூறினார்.

Update: 2022-08-14 23:11 GMT

ராமேசுவரம்,

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரம் வந்தார். பின்னர் அவர் இந்திய கடற்படை நிலையத்தில் உள்ள தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன்பிடி விசைப்படகு ஒன்றில் மீனவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்காக புறப்பட்டு சென்றார்.

சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையிலும் கடலுக்குள் சென்ற அவா், கையில் தேசிய கொடியுடன் பயணித்து சுதந்திர தின விழாவை கொண்டாடினார்.

அண்ணாமலை, ஒரு விசைப்படகில் சென்றபோது அதை பின்தொடர்ந்து ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டி வருமாறு:-

கச்சத்தீவு

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு பின்னர் தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 1972-ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்ததால் அந்த தீவில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி ஓய்வெடுக்க முடியாமலும், வலைகளை உலர்த்த முடியாமலும் போனது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது தவறு என்று கூறி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

கச்சத்தீவால் இலங்கைக்கு எந்த பயனும் இல்லை. அது நமக்குத்தான் வேண்டும். தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்பதுதான். அதே நோக்கத்தைத்தான் பா.ஜ.க.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விரும்பத்தகாத செயல்

மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு அவை நிவர்த்தி செய்யப்படும். அதுபோல 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான படகுகள் விடுவிக்கப்பட்டு தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவரப்பட்டு உள்ளன. மீதம் உள்ள படகுகளும் மீட்கப்படும்.

மதுரையில் நிதி அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம், விரும்பத்தகாத செயல். டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அந்த இடத்தில் வேறு ஒரு நிர்வாகி நியமிக்கப்படுவார். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி, பா.ஜ.க. அல்ல. இந்த கட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பலதரப்பட்டவர்களும் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்