மாவட்டம் முழுவதும், தி.மு.க.வினர்கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்
16-ந் தேதி அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி தி.மு.க.வினர் கொண்டாட வேண்டும் என்று மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் சுபாசு தலைமை தாங்கினார். துணைச்செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, 'பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி வருகிற 16-ந் தேதி சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பேசுகிறார். எனவே பொதுக்கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
வருகிற 16-ந் தேதி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மாநகர், ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியின் மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மணி, தாமரைக்கண்ணன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பூபதி, அசோகன், குப்புசாமி, நாசர்கான், பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, மாநகர துணைச்செயலாளர்கள் கணேசன், தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.