தோல்வியின் மூலம் வெற்றிக்கான வழிகளை கண்டறியலாம்
ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிறுவனர் தின விழாவில், தோல்வியின் மூலம் வெற்றிக்கான வழிகளை கண்டறியலாம் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஊட்டி,
ஊட்டி லாரன்ஸ் பள்ளி நிறுவனர் தின விழாவில், தோல்வியின் மூலம் வெற்றிக்கான வழிகளை கண்டறியலாம் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
லாரன்ஸ் பள்ளி
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் 164-வது நிறுவனர் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆளுநர் குழுவின் தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, சிறந்த மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், பரிசுக்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்த விழாவில் கலந்துகொண்டதை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இந்த பள்ளியை உருவாக்கியவர்களுக்கும், அதை வளர்த்து எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி. உலக அரங்கில் இந்தியா சிறந்த இடத்தை பிடித்ததற்கு சிறந்த அரசியல் தலைவர்களும், அரசியல் நிலை தன்மையும் காரணமாகும்.
தோல்வியில் கற்றுக்கொள்ளலாம்
நாம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டு செய்வதைவிட, அந்த விஷயமாகவே மாறி விடுவதுதான் சிறந்த அறிவாகும். வானியல் தொழில்நுட்பம் குறித்து கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இருந்த ஆர்வம், தற்போது வரை அப்படியே உள்ளது. மேலும் வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்து விட்ட திருப்தி எனக்கு உள்ளது. கடந்த ஆண்டு கால பணியின் மூலம் வெற்றியை விட தோல்வியில் இருந்து அதிகம் கற்றுக்கொள்ள முடிந்தது.
அதே சமயத்தில் தோல்வியின் போது வரும் விமர்சனங்களை சரியாக உற்றுநோக்கினால், அதிலிருந்து வெற்றிக்கான சூட்சமங்களை கண்டறியலாம். இதேபோல் குழுவாக இணைந்து செயல்படுதல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய பண்புகள் மிகவும் முக்கியமாகும். பள்ளிகளில் இருந்த நாட்களே வாழ்க்கையின் சிறந்த தருணமாகும். எந்தத் துறையில் பணியாற்றினாலும் நாட்டுக்காகவும், மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையிலும் நமது செயல்பாடு இருக்க வேண்டும்.
குதிரை சாகசம்
அதேபோல் செயற்கைக்கோள்கள், அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகள் மனித உயிர்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதே முக்கியம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவருக்கு பாரம்பரிய சீருடையில் ராணுவ மரபு கொண்ட அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதைதொடர்ந்து இசைக்குழு மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய நிகழ்ச்சி காண்போரை வியக்க வைத்தது. பள்ளி மைதானத்தில் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகள், கலையரங்கில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி ஆடைகள், கைவினைக்கலை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. விழாவில் வெளிமாநிலங்களில் இருந்து பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.