மேட்டூர் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்-ஆடிப்பெருக்கு விழாவை விட பூங்கா நுழைவு கட்டணம் வசூல் அதிகம்
மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஆடிப்பெருக்கு விழாவை விட பூங்கா நுழைவு கட்டணம் அதிகமானது.
மேட்டூர்:
மேட்டூர் பூங்கா
மேட்டூர் பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு அதிக அளவு வந்து இருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு அணை அருகில் உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நேற்று ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கோவிலுக்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் வந்து இருந்தனர். ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். மேலும் தாங்கள் சமைத்த உணவை பூங்காவுக்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். சிறுவர், சிறுமிகள் விளையாட்டு சாதனங்களில் விளையாடி பொழுதை கழித்தனர்.
நுழைவு கட்டணம் அதிகம்
ஒருசிலர் பூங்காவை சுற்றி பார்த்த பிறகு அணையின் வலது கரை பகுதியில் அமைந்துள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தனர். மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
நேற்று ஒரே நாளில் மட்டும் பூங்காவிற்கு 20 ஆயிரத்து 656 பேர் வருகை தந்துள்ளனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கு 2 ஆயிரத்து 694 பேர் வருகை தந்துள்ளனர். இவர்கள் வருகையால் நுழைவு கட்டணமாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வசூலானது.
ஆடிப்பெருக்கு விழாவான ஆடி 18 அன்று மேட்டூர் பூங்காவில் வசூலான தொகை ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 350 மட்டுமே. அதை விட நேற்று வசூலான தொகை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.