மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

மூதாட்டியிடம், சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-09-03 20:41 GMT

கும்பகோணம்;

மூதாட்டியிடம், சங்கிலி பறிக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயற்சி

கும்பகோணம் செக்கடி தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா(வயது 65). இவர், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது சந்திரா கத்தி கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

கைது

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பிடித்து கும்பகோணம் மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.இதனையடுத்து போலீசார், அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற நபர், திருப்பனந்தாள் காயிதேமில்லத் தெரு பகுதியை சேர்ந்த அன்சாரி மகன் சலீம்(30) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற சலீமுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். இதனையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் போலீசார் சலீமை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்