உடுமலை வன குடியிருப்பை சேர்ந்த பழனிசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க கடந்த வாரம் மாவட்ட கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க உள்ளாட்சி அமைப்பு சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 மாதங்களில் சாலைவசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதியை தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உடுமலை ஆர்.டி.ஓ.வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிசாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.