சிறுமியை பலாத்காரம் செய்த மூன்று பெண்டாட்டிக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்த மூன்று பெண்டாட்டிக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

Update: 2022-05-31 18:58 GMT

மூன்று பெண்டாட்டிக்காரர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரசின்னு (வயது 47). இவர் முதலில் தனது அக்காள் மகளை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் குடியேறினார். பின்னர் முஸ்லிம் மதத்திற்கு மாறி வீரசின்னு என்ற தனது பெயரை உமர்முக்தர் என மாற்றிக்கொண்டு அங்கு வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 3-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து சின்னதாராபுரத்தில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலையை செய்து வந்துள்ளார்.

சிறுமி பலாத்காரம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி 4 வயது சிறுமியை பலூன் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர்முக்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி நசீமாபானு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.

20 ஆண்டுகள் சிறை தண்டனை

அதில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை உமர்முக்தர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி உள்ளதால், இதில் அதிகபட்ச தண்டனையான 20 ஆண்டு சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். இதனைதொடர்ந்து உமர்முக்தரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்