பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து ரூ.23 ஆயிரம் பறித்த 3 பேர் கைது
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரூ.23 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரூ.23 ஆயிரம் பணத்தை நூதன முறையில் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம்.மையம்
வாணியம்பாடி சி.எல்.சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம்.மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் வாணியம்பாடியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் ரங்கநாதனிடம் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ஏ.டி.எம் கார்டை வாங்கினார். ரகசிய குறியீட்டு எண்ணையும் கேட்டுப்பெற்ற அவர் வேறு ஒரு கார்டை ரங்கநாதன் கவனிக்காத நேரத்தில் ஏ.டி.எம்.மையத்தில் செலுத்தினார்.
மாற்றிக்கொடுத்தார்
உங்கள் கார்டில்பணம் இல்லை என்று கூறி ரங்கநாதனிடம் மர்மநபர் கார்டை கொடுத்தார். அதனை தன்னுடைய கார்டுதான் என நினைத்து ரங்கநாதன் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
அப்போது ஏ.டி.எம்.மையத்தில் மர்மநபரும் அவருடன் வந்திருந்த மேலும் 2 பேரும் சேர்ந்து ரங்கநாதனின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்த ரூ.23 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.
அப்போது ரங்கநாதனின் செல்போனுக்கு ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்தது.தனது ஏ.டி.எம்.கார்டை பறித்துக்கொண்டு பணம் இல்லாத ஏ.டி.எம்.கார்டை தன்னிடம் கொடுத்து ஏமாற்றியதை அதன்பின்னரே அவர் உணர்ந்தார்.
இதுகுறித்து அவர் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மையத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது ரங்கநாதனிடம் நூதனமுறையில் பணத்தை பறித்தவர்கள் உதயேந்திரம் புதுமனை தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (39), இளையநகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28), தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 ஏ.டி.எம். கார்டுகள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.9ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.