மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மையப் பணிகளை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்துவதைத் தடுக்க பெருமளவில் காவல்துறையினரை குவித்துள்ள தமிழக அரசு, பணி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் கண்டித்தும், பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பார்வதிபுரம் மக்கள் கடந்த 7-ம் நாள் போராட்டம் நடத்தினர். போராடிய மக்களை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்த தமிழக அரசு, கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இது தொடர்பாக பார்வதிபுரம் மக்களுடன் எந்தப் பேச்சும் நடத்தாமல் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஆகும். இதற்காக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வள்ளலாருக்கு பன்னாட்டு மையம் அமைக்கப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் காண சத்தியஞான சபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கக்கூடாது; அம்மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். பெருவெளியை ஜோதி தரிசனத்தைக் காணபதைத் தவிர வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று வள்ளலாரே வலியுறுத்தியிருக்கிறார். வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளி பகுதியில் பன்னாட்டு மையத்தை அமைக்க தி.மு.க. அரசு துடிப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கத் துடிப்பது ஏன்? என சென்னை ஐகோர்ட்டும் தமிழக அரசுக்கு வினா எழுப்பியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.