உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல்:சாமியார், ஜீயர் மீது தி.க.வினர் புகார்
உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியார், ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.க.வினர் புகார் கொடுத்தனர்.;
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுருளிராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ம.தி.மு.க., த.மு.மு.க., ம.ம.க., ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று வந்தனர். அங்கு தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தத்திடம் அவர்கள் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில், 'சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு என்று அறிவித்தார். இதேபோல், மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்ப மன்னார் என்பவரும் மிரட்டல் விடுத்து கருத்து தெரிவித்தார். அந்த சாமியார், ஜீயர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.