நாகை, வேதாரண்யத்தில் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்

ஆடி அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Update: 2022-07-28 16:49 GMT

வெளிப்பாளையம்:

ஆடி அமாவாசையையொட்டி நாகை, வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

ஆடி அமாவாசை

அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, படையலிட்டு வழிபாடு நடத்தி அன்னதானம் செய்வது வழக்கம். மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தை விட ஆடி அமாவாசை, தைஅமாவாசை, மகாளய அமாவாசை, சோமாவதி அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் தங்கள் வாரிசுகளை செல்வ செழிப்புடன் வாழ வைப்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. தர்ப்பணத்தில் பசும்பால், தேன், நெய், எள் மற்றும் காய்கறிகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள்

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று நீர்நிலைகளில் திரளானோர் புனித நீராடி கடற்கரை மற்றும் ஆற்றங்கரைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தர்ப்பணம்

அதன்படி நாகை புதிய கடற்கரையில் ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதல் குவிந்தனர்.

பின்னர் கடலில் புனித நீராடி கடற்கரையில் பச்சரிசி, காய்கறி, சூடம், பத்தி உள்ளிட்டவர்களை வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

மக்கள் கூட்டம் அலைமோதியது

இதேபோல காமேஸ்வரம் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

வேதாரண்யம்

வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடலில் சித்தர் கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். இதை தொடர்ந்து தங்களின் முன்னோர்களுக்கு கடற்கரையில் பச்சை, அரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து தர்ப்பணம் செய்தனர்.

இதையடுத்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மணிகர்ணிகை தீர்த்தத்தில் மின்மோட்டர் மூலம் பைப் வைத்து ஷவர் மூலம் பக்தர்கள் நீராடினர்

பின்னர் திருமண கோலத்தில் உள்ள வேதாரண்யேஸ்வருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி அமாவாசையையொட்டி புனித நீராட வரும் பொதுமக்களுக்கு வேதாரண்யம் நகராட்சி, கோடிக்கரை ஊராட்சி மன்றத்தினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர். மேலும் பல்வேறு ஊர்களிலும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வேதாரண்யம் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்