தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பலன் கிடைக்கும்
தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பலன் கிடைக்கும் என காட்பாடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
தி.மு.க.வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பலன் கிடைக்கும் என காட்பாடியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
தி.மு.க. 15-வது பொதுக்குழு தேர்தலில் 2-வது முறையாக பொதுச் செயலாளராக அமைச்சர் துரைமுருகன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ரெயில் மூலம் நேற்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தார்.
அவருக்கு, தி.மு.க.வினர் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்னர் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சித்தூர் பஸ் நிலையம் வரை கரகாட்டம், புலியாட்டம், சிலம்பம், மேளதாளம், செண்டைமேளம், வாணவேடிக்கை முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து திறந்த ஜீப்பில் துரைமுருகன் வந்தார். தாராபடவேட்டில் பெண்கள் சாலையோரம் வரிசையாக நின்று பூரண கும்ப மரியாதை அளித்து பூக்கள் தூவி வரவேற்றனர்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
தொடர்ந்து சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். கட்சி நிர்வாகிகள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
விழாவில் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:-
நான் பொதுச்செயலாளராக ஆனது எனக்கு மட்டுமல்ல, இந்த மாவட்டத்திற்கு பெருமை. தி.மு.க வரலாற்றில் அன்றைக்கு இருந்த வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து அதிக எம்.எல்.ஏ.க்களை தந்தது. வேலூர் மாவட்டத்தில் இன்றைக்கு காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நான். மாணவ பருவத்தில் இருந்து எனக்கு இந்த இயக்கத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
மிகப்பெரிய பதவி
மாணவரணி செயலாளர், தணிக்கைக் குழு உறுப்பினர், துணைப் பொது செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என பல பொறுப்புகளை எனக்கு கலைஞர் கொடுத்தார். அவர் விட்ட இடத்தில் இருந்து அவரது தனயனும், தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எனக்கு பொதுச் செயலாளர் பதவியை தந்துள்ளார். இது மிகப்பெரிய பதவி. நீங்கள் தந்த உழைப்பால், காட்பாடி மக்கள் தொடர்ந்து எனக்கு கொடுத்த வெற்றியால் 2-வது முறையாக இந்த பொதுச்செயலாளர் பதவியில் உள்ளேன்.
பொதுச்செயலாளர் பதவி என்பது பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் எழுப்பிய கோபுரம். அதன் அடியில் கிடக்கும் செங்கல் நான். எனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கழகத்திற்காக யார் உண்மையாக உழைத்தாலும் அவர்களுக்கு பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வேலூரில் உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வெள்ளி செங்கோல்
அமைச்சர் துரைமுருகனுக்கு காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வள்ளிமலை வி.வேல்முருகன் வெள்ளி செங்கோல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அமலு விஜயன், நல்லதம்பி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 5-வது வட்ட தி.மு.க செயலாளர் பி.விநாயகம், காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தணிகாசலம், ஒன்றிய பொருளாளரும், 55 புத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான ஜி.சண்முகம், வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளரும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான அக்ராவரம் ஏ.கே.முருகன், காட்பாடி மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பி.பழனி, ஒன்றியக்குழு உறுப்பினர் தனலட்சுமி பழனி, காட்பாடி மேற்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான காந்திமதி சேட்டு உள்ளிட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, பி.முருகபெருமாள், என்.பரமசிவம், காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கருணாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சி.சந்திர சேகரன், ஜிம் எம்.ஆர்.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி ரெயில் நிலையம் முதல் ஓடை பிள்ளையார் கோவில் வரை இரு பக்கமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.