அ.தி.மு.க.வை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க.வை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று திருச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-08-28 23:20 GMT

திருச்சி,

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நேற்று வந்தார். பின்னர் அவர், வயர்லெஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்கி போட்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறிவிட்டு, சென்னை மெரினாவில் ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச்சின்னம் தேவையா? இதற்கு மட்டும் எப்படி நிதி வந்தது? என்று மக்கள் கேட்கிறார்கள்.

ஏஜெண்டாக செயல்பட்டவர்

இன்றைக்கு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. அவர் (ஓ.பன்னீர் செல்வம்) இந்த இயக்கத்தில் மீண்டும் வந்து இணையும் போது, 10 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும், 11 எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே அவர் பக்கம் இருந்தார்கள். ஆனால் நாம் துணை முதல்-அமைச்சர் என்ற பெரிய பதவியை அவருக்கு கொடுத்தோம்.

ஜெயலலிதாவுக்கு விசுவாசி என்கிறார். ஆனால் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்த்து ஓட்டு போட்டார். 1989-ல் ஜெயலலிதா தன்னந்தனியாக தேர்தலுக்கு வந்தபோது போடிநாயக்கனூரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு அவர் தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டவர்.

அணி மாறாமல் இருக்கிறேன்

நான் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடியில் வெற்றி பெற்றேன். 1974 முதல் அணி மாறாமல் இருக்கிறேன். கட்சியை காப்பாற்றும் பொறுப்பில் உள்ள இவரே, ரவுடிகளை கொண்டு கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி, முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுவிட்டு, தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கிறார்.

தொண்டர்களின் மனநிலையை அறிந்தவன் நான். இவரை போல் எத்தனை பேர் வந்தாலும் இந்த இயக்கத்தை ஆட்டவும், அசைக்கவும் முடியாது. தி.மு.க.வோடு கைகோர்த்து இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைப்போருக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்