அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

கோவை, கரூர், திண்டுக்கல்லில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Update: 2023-08-03 20:15 GMT
கோவை


கோவை, கரூர், திண்டுக்கல்லில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.


அமலாக்கத் துறையினர் வழக்கு


அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சென்னை யில் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களை கண்காணித்து அவர்களின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.


டாஸ்மாக் மேற்பார்வையாளர்


அந்த வகையில் கோவையில் நேற்று 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-


நெல்லையை சேர்ந்தவர் முத்துபாலன் (வயது 40). இவர், கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.


இவரது வீடு, கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது.


இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் இவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்தனர்.


10 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர், முத்துபாலன் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வீட்டுக்குள் யாரும் வரமுடியாதபடி வீட்டின் கதவுகளை பூட்டினர்.


முக்கிய ஆவணங்கள்


இதையடுத்து அதிகாரிகள் குழுவினர், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று, அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.


இதையொட்டி அந்த வீட்டின் முன்பு கோவை வெள்ளலூரில் உள்ள மத்திய அதிவிரைவுப்படை போலீசார், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சோதனை தொடங்கியபோது, முத்துபாலன் வெளியே சென்று இருந்தார். அதன் பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின்போது, முத்துபாலன் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.


கட்டுமான நிறுவனம்


இதே போல்கோவை- திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியில் அருண் அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனத் திலும் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.


காலை 10 மணியில் இருந்து இந்த சோதனை நடைபெற்றது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண் மற்றும் ஊழியர்கள் அங்கு இருந்தனர்.


சோதனை நடைபெற்றபோது, அந்த அலுவலகத்தின் வாயில் கதவு மூடப்பட்டது. அங்கும் மத்திய அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


இதேபோல் சிவராம்நகரில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளர் அருணின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.


கோவையில் மேற்கண்ட 3 இடங்களிலும் இரவு 7 மணியை கடந்தும் அமலாக்கத்துறையினரின் சோதனை நீடித்தது.


பரபரப்பு


கரூரில் செந்தில்பாலாஜியின் உறவினர் ஒருவருக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களா வீட்டை கட்டும் பணியில் அருணின் நிறுவனம் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கிற்கு ஆவணங்களை திரட்டும் வகையில், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி வருவதாக கூறப்படுகிறது.


நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் அமலாக்கத் துறையினர் நடத்திய இந்த சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கரூரில் 4 இடங்களில் சோதனை


இது போல் நேற்று கரூரில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். அப்போது அம்பாள் நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து செங்குந்தபுரத் தில் உள்ள சங்கரின் பைனான்ஸ் அலுவலகம், சின்னாண்டாங் கோவில் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் கடை உரிமை யாளர் பிரகாஷ் வீடு, அவரது மார்பிள்ஸ் கடை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 4 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது துப்பாக்கி ஏந்திய 20-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல்


இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவராக கூறப்படும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனின் வீடு மற்றும் தோட்டத்து பங்களாவில் நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை நேற்றும் விடிய, விடிய நடந்தது. நேற்று அதிகாலை 5½ மணி அளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.


மேலும் செய்திகள்