முட்புதர்கள் நிறைந்த சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலய பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காடுபோல் காட்சியளிக்கிறது.

Update: 2023-05-06 18:45 GMT

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலய பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காடுபோல் காட்சியளிக்கிறது.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் அருகே உள்ளது சக்கரக்கோட்டை கண்மாய். 230 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கண்மாயில் உள்ள நாட்டுக்கருவை மரங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள உணவுகள் உள்ளிட்ட காரணங்களினால் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான கால கட்டத்தில் பறவைகள் அதிகளவில் வந்து கூடுகட்டி இரைதேடி வாழ்ந்து செல்வது வழக்கம்.

இந்த சரணாலயத்தில் 30 இனங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் பறவைகள் தவிர புலம்பெயர்ந்த பறவைகளும் இரைதேடி வந்துசெல்கின்றன. ஜனவரிக்கு பின்னர் நீரின் அளவு குறைந்து இப்பகுதியினர் வெள்ளரி விவசாயம் செய்து வாழ்வாதாரம் தேடிவருகின்றனர்.

காட்டுகருவேல மரங்கள்

கடந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனநிலையிலும் ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் ஆகியவற்றில் மட்டும் வைகை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இந்த நீரை பயன்படுத்தி விவசாயிகள் 2-ம் போக சாகுபடி செய்து வருகின்றனர். ஒருபுறம் கடல்போல் காட்சியளிக்கும் சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயமாக பறவைகளின் வாழ்விடமாக அமைந்திருந்தாலும் அதில் சீரமைக்க வேண்டிய பல குறைகள் உள்ளன. குறிப்பாக கண்மாயில் பறவைகள் கூடுகட்டி வாழ்வதற்கு தேவையான நாட்டுக்கருவேல மரங்கள் அதிகளில் வளர்ந்திருந்தாலும் அதனை அழிக்கும் வகையிலும் நீர் ஆதாரத்தை கெடுக்கும் வகையிலும் நீர்வரத்தை தடுக்கும் வகையிலும் காட்டுகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

கண்மாயில் எங்கு பார்த்தாலும் காட்டுக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது. பறவைகள் கூடுகட்ட பயனில்லாத இந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

பறவைகள் பாதிப்பு

இந்த காட்டுக்கருவேல மரங்களில் பல மரங்கள் பட்டுப்போய் பயனின்றி கருகிய நிலையில் உள்ளது. இந்த மரங்களினால் பறவைகள் கூடு கட்டி நீர்நிலைகளில் இரைதேட முடியாத அளவிற்கு மறைத்து காடுபோல் காட்சி அளிக்கின்றன. இதனால் பறவைகள் இரை கிடைக்காமல் அங்கும் இங்கும் திரிந்து தவித்து வருகின்றன. மறுபுறம் நீர்வற்றிய பின்னர் வெள்ளரி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் வனத்துறையினர் மூலம் காட்டுக்கருவேல முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்