தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் நேற்று அனல்மின்நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க செயலாளர் எஸ்.அப்பாத்துரை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, செயலாளர் ஆர்.ரசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகள்
போராட்டத்தில் என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியருக்கு என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் சம்பளத்தை வழங்க வேண்டும், கொரோனா பேரிடர் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 நாட்கள் பணி புரிந்தால் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தரமான குடிநீர் வசதி, கேண்டீன் வசதி, உணவு அருந்தும் அறை, பெண்களுக்கு பணியிடத்தின் அருகே கழிவறை, போதுமான இடவசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும், பணியிடத்தில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும், வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் தூத்துக்குடி மின்திட்ட செயலாளர் குன்னிமலையான், தூத்துக்குடி அனல்மின்நிலைய செயலாளர் கணபதி சுரேஷ், கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மாரியப்பன், உள்ளாட்சி ஊழியர் சங்கம் முனியசாமி, உப்பு தொழிலாளர் சங்க செயலாளர் சங்கரன், ஆட்டோ தொழிலாளர் சங்கம் முருகன், மாவட்ட உதவி தலைவர் பொன்ராஜ், மாநிலக்குழு கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.