மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டியில் உள்ள தோமையார் மலைத்திருத்தலத்தில் தோமையார் ஆலயமும், புனித சவேரியார் ஆலயமும் உள்ளது. பழமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பாஸ்கா பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் உயிர்த்த ஏசு மற்றும் தோமையார் சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் தேர் புனிதநீர் தெளித்து மந்திரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக அப்துல் சமது எம்.எல்.ஏ. தேரை வடம்பிடித்து இழுத்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். ஆலயம் அருகே இருந்து புறப்பட்ட தேர் ஊரை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.