இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டுவீட்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அதிர்ச்சி அளிக்கிறது இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-14 18:12 GMT

சென்னை,

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட பிரச்சனை ஒன்றை இந்தத் தருணத்தில் முதன்மைப்படுத்தி அடக்குமுறையான சூழலை உருவாக்கி இருப்பது வருத்தமளிக்கிறது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தநிலையிலும் 17 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

எனது முதன்மையான அக்கறை அவரது உடல் நலனில் தான். அவரை நேரில் சந்திக்க முடியாததால், அவர் விரைவில் பூரண நலத்துடன் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று அதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்