மண்பானையில் தண்ணீர் எடுத்து சமைத்து வழிபடும் பாரம்பரிய களரி விழா

மண்பானையில் தண்ணீர் எடுத்து சமைத்து வழிபடும் பாரம்பரிய களரி விழா நடந்தது.

Update: 2022-07-29 21:09 GMT


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு தெற்குவளவு காளிகருப்பன் கோவிலில் களரி திருவிழா நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இன்றி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த விழா நடைபெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்களது முன்னோர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய தெற்குவளவு 560 குடும்பங்களை சேர்ந்த பங்காளிகள் காளிகருப்பன் கோவில் களரி விழாவை பாரம்பரிய முறைப்படி பல ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்கு இருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் கட்டாயம் குடும்பத்துடன் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு விழாவுக்காக ஊருக்கு தெற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீர்த்த குளத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பல்வேறு நேர்த்திகடன்களை வைத்து 500- க்கும் மேற்பட்ட மண்பானைகளில் தீர்த்தம் எடுத்து அங்கிருந்து ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னோர்கள் காலத்தில் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை மறவாமல் அந்த 560 குடும்ப வாரிசுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒற்றுமையாக விழாவை கொண்டாடினர். நேர்த்திக்கடனுக்காக 400-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்களை படையலிட்டு தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்