திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-04-12 18:45 GMT

தொண்டி, 

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாகம்பிரியாள் கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் உள்ளதுமான பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10-நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, கேடகம், பூதம், அன்ன வாகனத்தில் சுவாமி அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுவாமி அம்மன் திருக்கல்யாணம், யானை வாகனம் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதிஉலாவும், 30-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 1-ந்தேதி நந்தி, சிம்ம வாகனத்திலும், 2-ந்தேதி வெட்டுங்குதிரை, காமதேனு வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தேரோட்டம்

3-ந் தேதி 9-ம் திருநாளையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. 4-ந் தேதி தீர்த்த வாரி உற்சவம், வெள்ளி ரிஷப வாகனம் புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், சிறப்பு மேளம், இன்னிசை கச்சேரி, கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், திருவெற்றியூர் ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் மற்றும் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகமும் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்