டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்று தங்கச் செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அடியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆதீனத்துக்கு ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவித்தும், தேவார, திருவாசகங்களை பாடியும் வரவேற்றனர்.
பின்னர் ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சர்ய சாமிகள், நிருபர்களிடம் கூறியதாவது:-
75 ஆண்டுகளாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் தற்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மூலம் நிறுவப்பட்டுள்ளது. செங்கோலுக்கு சிறப்பாக பூஜை நடைபெற்றது. அனைத்து ஆதீனங்களும் இதில் பங்கேற்றது பெருமைக்குரியது. இறைவனை எப்படி வணங்குவோமோ அதே போன்று செங்கோலின் முன்பாக தரையில் விழுந்து பிரதமர் வணங்கினார். அவர் அவ்வாறு வணங்கியது அருமையான காட்சியாக இருந்தது.
செங்கோல் வழங்கப்பட்டது கட்டுக்கதை கிடையாது. அதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் செங்கோல் குறித்து எங்களிடம் நேரில் கேட்டறிந்தனர். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. காமராஜர் காலத்தில் தேசிய பாதுகாப்பு நிதி திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரபிரசாத் போன்ற தலைவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.