திருவாரூர் மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியபெருமாள், செயலாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்துெகாண்டு தங்கள் பகுதிக்கு தேவையான சாலை வசதி மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முன்னதாக உணவு வேளாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களை மக்களிடத்தில் விரைந்து கொண்டு செல்வதற்கு 5 நிலை குழுவினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை கொண்டு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மாவட்ட ஊராட்சி தலைவர் கூறுகையில், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் கிராம சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.120 கோடியில் கிராம சாலை திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன என்றார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சவுந்தர்யா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.