திருத்தங்கல் ரெயில்வே மேம்பால வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும்
திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே மேம்பாலம்
சிவகாசி-திருத்தங்கல் இடையே செல்லும் ரெயில்பாதையின் மீது ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே பாலம் அமைக்க தேவையான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு வரைப்படங்கள் தயார் செய்யப்பட்டது.
இதில் பாலத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் திருத்தங்கல் ரெயில்வே மேம்பால கட்டுமான திட்டபணி வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் வர்த்தக சங்கம், திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை, நகைக்கடை வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
வரைபடம்
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்காக மாற்று வரைப்படம் தயார் செய்துள்ளோம். இதில் பாலத்தின் நீளம் 593 மீட்டருக்கு பதில் 547 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் நில எடுப்பு செலவும், ரெயில்வே மேம்பாலம் கட்டுமான செலவும் குறையும். கையகப்படுத்தப்பட வேண்டிய நிலத்தின் அளவும் குறையும். சாலைகளின் திருப்பங்கள் தவிர்க்கப்பட்டு நேர்சாலையாக அமைக்கப்படும். நாங்கள் கொடுத்துள்ள வரைப்படத்தின்படி ரெயில்வே பாலம் அமைக்கப்பட்டால் நகர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் உறுதி
மனுவுடன் மேம்பால மாதிரி புதிய வரைப்படத்தை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வுகாண்பதாக உறுதி அளித்தார்.அப்போது தி.மு.க. மாநில நிர்வாகி வனராஜா, சிவகாசி மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.