திருப்பூரில் நேற்று காலை முதல் இரவு வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. 'ஜில்'லென்ற குளிர்காற்றுடன் இதமான வானிலை இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதமான வானிலை
கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், நேற்று காலையில் இருந்தே மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மேல் நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதை தொடர்ந்து இரவு வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் 'ஜில்'லென்ற குளிர்காற்று வீசியது.
ஏற்கனவே மார்கழி மாத குளிருடன் மழைக்காற்றும் இருந்ததால் திருப்பூரில் வெப்பம் தணிந்து இதமான வானிலை காணப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காலையில் இருந்து சூரியனை பார்ப்பது அரிதாக இருந்தது. மதியம் சுமார் 2 மணியில் இருந்து 4 மணி வரைக்கும் வழக்கமான வெயில் இருந்தது.
வெறிச்சோடிய கடை வீதி
திருப்பூரை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த அதே வேளையில், தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. புதுமார்க்கெட் வீதி, காதர்பேட்டை உள்ளிட்ட மாநகரின் பல கடை வீதிகள் வழக்கமான கூட்டம் இன்றி வெறிச்சோடியது.
இதேபோல், பல்லடம் ரோடு சந்தைப்பேட்டையில் மார்க்ெகட் வளாகம் சேறும், சகதியுமாக மாறியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் மார்க்கெட்டிற்கு வந்து சென்றனர். அலுவலகம், நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும்சிரமப்பட்டனர்.