அகில இந்திய தொழிற்தேர்வில் திருப்பூர் பெண் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அளவில் 3-வது இடம்
திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்தவர் வெண்ணிலா மணிகண்டன் (வயது 34). இவர் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தையல் தொழில்நுட்பம் (சூயிங் டெக்னாலஜி) பாடப்பிரிவில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார்.
2022-ம் ஆண்டுக்கான அகில இந்திய தொழிற்தேர்வில் இவர் 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் 3-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.
அமைச்சர் விருது வழங்கினார்
இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் மாநில மையத்தில், அகில இந்திய அளவில் முதல் 3 இடங்களை பிடித்த தமிழக பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு, வெண்ணிலா மணிகண்டனுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டினார்.
வெண்ணிலா மணிகண்டனின் கணவர் விஸ்வக் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் மணிகண்டன் ஆவார். மாநில மற்றும் அகில இந்திய அளவில் சாதனை படைத்த வெண்ணிலா மணிகண்டனை திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.