திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருமுருகநாதசாமி கோவில்
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற முயங்குபூண்முலை வல்லியம்மை உடனமர் திருமுருகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதன்படி மார்ச் மாதம் 1-ந்தேதி சூரிய, சந்திர மண்டலக்காட்சிகள், 2-ந்தேதி பூதவாகனம், சிம்ம வாகனக்காட்சிகள், 3-ந்தேதி புஷ்ப விமானக்காட்சி, 4-ந்தேதி பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனக்காட்சி, 5-ந்தேதி திருக்கல்யாணம், யானை வாகனம், அன்ன வாகனக் காட்சிகள் நடைபெறுகிறது.
6-ந் தேதி தேர்த்திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 7-ந்தேதி 2-வது நாள் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
8-ந்தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகனக்காட்சிகள் மற்றும் தெப்பத்திருவிழாவும், 9-ந்தேதி சுந்தரர் வேடுபறி திருவிழாவும், 10-ந்தேதி பிரம்ம தாண்டவ தரிசனக்காட்சியும் நடக்கிறது.
தேர்கள் சீரமைக்கும் பணி
11-ந்தேதி மஞ்சள் நீர்விழா மற்றும் மயில்வாகனக் காட்சியுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. தேர்த்திருவிழாவையொட்டி கோவில் அருகே தேர்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த முருகன், சிவன், அம்பாள் ஆகிய 3 தேர்களும் நேற்று முன்தினம் தேரோடும் பாதைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதன் பின்பு 3 தேர்களிலும் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்த்திருவிழாவுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.