மது பாராக மாறிவரும் திருக்கோவிலூர் ரெயில் நிலையம் :பயணிகள் வருவதற்கே அஞ்சுகிறார்கள்

திருக்கோவிலூர் ரெயில் நிலையம் மதுபார் போன்று மாறிவருவதால் பயணிகள் இங்கு வருவதற்கே அஞ்சுகிறார்கள்.

Update: 2023-09-10 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ரெயில் நிலையம் அரகண்டநல்லூரில் அமைய பெற்றுள்ளது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதில் 7 ரெயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. இதன் மூலம் திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

பகல் முழுவதும் ரெயில் பயணிகளுக்கு சேவையை அளிக்கும் இந்த திருக்கோவிலூர் ரெயில் நிலையம், இரவு சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிடுகிறது. சிலர், நடைமேடையில் அமர்ந்து மது குடிப்பது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தி ஒரு மதுபார் போன்று மாற்றி அமைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள், போதை ஆசாமிகள்.

பயணிகளின் பாதுகாப்பு

அதோடு மட்டுமின்றி, மதுபாட்டில்களை நடைமேடை மற்றும் தண்டவாள பகுதியில் உடைத்து போட்டுவிடுகிறார்கள். ஒருசிலர் போதை தலைக்கேறி தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து நடைமேடையில் அலங்கோலமாக படுத்து கிடக்கும் நிலையும் இருக்கிறது.

இதனால், ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது. அதோடு அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. குறிப்பாக பகல் நேரங்களில் இந்த ரெயில் நிலையத்தை கல்லூரி மாணவிகள் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களது பாதுகாப்பும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

ரெயில்நிலையத்துக்கு எதிரே தான் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் உள்ளது. அவ்வாறு இருந்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். இதுபற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பது பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.

ரெயில் நிலையமா? மது பாரா?

இது குறித்து ரெயில் பயணி ஒருவர் கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோவிலூர் ரெயில் நிலையத்துக்கு உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, இங்குள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி தரிசனம்செய்ய வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் ரெயில் மூலம் வந்து செல்வார்கள். ஆனால் இங்கு வரும் பயணிகளை கையாளும் வகையில் போதிய அடிப்படை வசதிகள் ரெயில்நிலையத்தில் இல்லை.

குறிப்பாக இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவது வேதனையாக உள்ளது. நடைமேடைகளில் ஆங்காங்கே காலி மற்றும் உடைந்த மதுபாட்டில்கள் கிடக்கின்றன. இதை பார்க்கும் போது, இது ரெயில் நிலையமா? அல்லது மதுபாரா? என்று எண்ண தோன்றுகிறது.

அச்சமாக உள்ளது

சிலர் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை நடைமேடையிலேயே போட்டு உடைக்கிறாா்கள். சிதறிய பீங்கான் துண்டுகள் நடைமேடையில் நடந்து செல்லும் பயணிகளின் பாதங்களை கிழித்து காயத்தை ஏற்படுத்துகிறது. போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் ரெயில் நிலையத்துக்கு வரவே அச்சமாக உள்ளது.

எதிரே போலீஸ் நிலையம் இருக்கும்போதே சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதுதான் மிகவும் கொடூரம். இது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றார் அவர்.

Tags:    

மேலும் செய்திகள்