திருக்கார்த்திகை: வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு
திருவாரூரில் திருக்கார்த்திகை திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருவாரூரில் திருக்கார்த்திகை திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
திருக்கார்த்திகை திருவிழா
தீப ஒளி திருநாளாக திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கார்த்திகை நாளில் கோவில்கள், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். அந்த வகையில் நேற்று திருக்கார்த்திகை திருவிழா திருவாரூர் மாவட்டம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
திருவாரூரில் உள்ள கோவில்கள், வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சி அளித்தன. வீடுகளில் பெண்கள் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வெல்லம், அவல் கலந்த பொரியை சாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். வீட்டு வாசல்களில் வண்ண கோலங்கள் போடப்பட்டு இருந்தன. கோலங்கள் மீது பூக்களை பரப்பி குத்து விளக்குகளை ஏற்றி, அதை சுற்றி அகல் விளக்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
திருவாரூர் நகரின் அனைத்து பகுதியில் உள்ள தெருக்களிலும் இவ்வாறு வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்ததால் நகரமே ஜொலித்தது.
தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில், கமலாலய குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவில், வடக்கு வீதி விஸ்வாமித்ரர் கோவில், குமர கோவில், கீழவீதி பழனியாண்டவர் கோவில், திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
இரவில் பின்னர் கோவில் வாசலில் பனை மட்டை அடுக்கி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் கார்த்திகை திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக சாமி வீதிஉலா நடந்தது. இதேபோல் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா நடந்தது. இதையொட்டி சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் காக்கையாடி ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று திருக்கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்தனர்.