திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-06-07 14:21 GMT

தூத்துக்குடி:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகம் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார்.

பக்தர்கள்

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) முதல் 13-ந் தேதி(திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இந்த விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி மூலம் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், பழுதடைந்த சாலைகள் மற்றும் மின்விளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பஸ்கள்

மேலும், சுகாதாரத்துறை மூலம் திருவிழா நாட்களில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கோவில் வளாகத்தில் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும். போதிய மருந்துகள் இருப்பில் வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். போக்குவரத்துத்துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத்துறை மூலம், நீச்சல், கடலாள், முத்துகுளி பணியாளர்களுடன் பாதுகாப்பு பணியில் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் கடலில் உயிர்க்காப்பு மிதவை வளையங்களுடனும், உயிர்மீட்பு படகுடனும் பாதுகாப்பு பணிகளிலும், தீயணைப்பு ஊர்தியில் முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டும், மருத்துவ ஊர்தியும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

போலீஸ் துறை மூலம், கோவில் உட்பகுதிகள், வெளிபகுதிகள் மற்றும் இதர இடங்களில் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கோவில் வளாகங்கள் மற்றும் திருச்செந்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்க வேண்டும். மேலும், பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். வைகாசி விசாகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்