முப்பம்தரத்து இசக்கியம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
கழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோவில் கொடைவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை மேலபஜார் பகுதியில் உள்ள முப்பம்தரத்து இசக்கியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு விழா மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 9.30 மணியளவில் பக்தர்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். காலை 10.15 மணிக்கு கோவில் முன்பு நாட்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 24-ந் தேதி வரை இசக்கி அம்மனுக்கு தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடைபெறும். வரும் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 26-ந்தேதி காலை 10 மணியளவில் தீர்த்தகுடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு தீர்த்தசாம பூஜை நடக்கிறது.