திருப்பூரில் இந்த மாதம் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதம் நூல் விலையே தொடர்வதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளது பனியன் தொழில்துறையினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பஞ்சு விலை உயர்வு
பனியன் தொழிலின் முக்கிய மூலப்பொருளாக நூல் உள்ளது. பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த காலங்களில் வரலாறு காணாத வகையில் நூல் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வால் உள்நாட்டு, வெளிநாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஆடை தயாரிப்பில் முனைப்பு காட்டவில்லை. கடந்த ஆண்டை விட 100 சதவீதம் நூல் விலை உயர்ந்தது.
பின்னர் கடந்த 4 மாதமாக நூல் விலை குறைந்து வருகிறது. பஞ்சு விலை 1 கேண்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் இருந்து ரூ.65 ஆயிரமாக குறைந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் ரூ.75 ஆயிரத்தை எட்டியுள்ளது. இருப்பினும் நூல் விலையை நூற்பாலைகள் உயர்த்தவில்லை.
நூல் விலையில் மாற்றமில்லை
ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான நூல் விலையில் மாற்றம் இல்லை. கடந்த மாத நூல் விலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.40-ம், நவம்பர் மாதம் ரூ.20-ம் நூல் விலை குறைந்து இருந்தது. நவம்பர் மாத நூல் விலையே இந்த மாதமும் தொடர்கிறது.
அதன்படி கோம்டு ரகம் வரி நீங்கலாக 20-ம் நம்பர் கிலோ ரூ.273, 24-ம் நம்பர் ரூ.285, 30-ம் நம்பர் ரூ.295, 34-ம் நம்பர் ரூ.315, 40-ம் நம்பர் ரூ.335 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செமி கோம்டு ரகம் 20-ம் நம்பர் 265, 24-ம் நம்பர் ரூ.275, 30-ம் நம்பர் ரூ.285, 34-ம் நம்பர் ரூ.305, 40-ம் நம்பர் ரூ.325 என உள்ளது. நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது பனியன் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஆர்டர்கள்
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர்களுக்கான விசாரணை நடந்து வரும் இந்த நேரத்தில் நூல் விலை உயராமல் இருப்பது சாதமான சூழ்நிலையாக அமைந்துள்ளது. நூல் விலை உயராமல் இப்படியே தொடர்ந்தால் புதிய ஆர்டர்களை தைரியமாக எடுத்துச் செய்ய முடியும். பனியன் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர