திம்பம் மலைப்பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதை

Update: 2022-09-19 19:30 GMT

திம்பம் மலைப்பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திம்பம் மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

லாரி கவிழ்ந்து விபத்து

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று கோவைக்கு புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே திரும்பும்போது திடீரென மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி லாரியின் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தக்காளி பெட்டிகள் கீழே விழுந்தன. இதனால் அதில் இருந்த தக்காளி முழுவதும் சாலையில் சிதறின.

இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்