திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம்
திருவந்திபுரம்தேவநாத சுவாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம் தொடங்கியது
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தலமாகும். இந்த கோவிலில் பகல் பத்து உற்சவம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து அன்று இரவு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 7-ம் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராப்பத்து மண்டபத்திற்கு கொண்டு சென்று திருமஞ்சனம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது.
இதில் முக்கிய நிகழ்ச்சியாக தேவநாதசுவாமி மூலவருக்கு ஆபரண தங்கம் அகற்றி தைல காப்பு உற்சவம் தொடங்கியது. இதையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் மூலவர் தேவநாத சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மீண்டும் ஆபரண தங்கம் அணிவிக்கப்படும்
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து ராஜ அலங்காரத்துடன் இருந்த தேவநாதசுவாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இந்த தைலக்காப்பு அலங்காரம் வருகிற சித்திரை மாதம் வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் தைலக்காப்பு எடுத்துவிட்டு மீண்டும் பெருமாளுக்கு ஆபரண தங்கம் அணிவிக்கபடும். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.