60 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் திருட்டு

Update: 2022-09-05 17:49 GMT


அவினாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள், ரூ.6 லட்சத்தை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருடிச்சென்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மளிகை-ஸ்டேஷனரி உரிமையாளர்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு மருத்துவமனை எதிரே ராஜாஜி வீதியில் வசிப்பவர் அப்துல்வகாப் (வயது52). இவருக்கு திருமணமாகி ரோஜா (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் திருமுருகன்பூண்டியில் மளிகைக்கடையும், திருப்பூரில் ஸ்டேஷனரி ஸ்டோரும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இவரது உறவினர் இறந்து விட்டதால் அப்துல்வகாப் கடந்த 3-ந்தேதி குடும்பத்துடன் மைசூர் சென்றுவிட்டு நேற்றுமாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் திருட்டு

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மரபீரோ உள்ளிட்ட 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.6 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பவுல்ராஜ், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ராஜாஜி வீதியில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா உள்ளதா என்பதை விசாரித்தார். மேலும் போலீஸ் மோப்பநாய் டெவில் கொண்டு வரப்பட்டது. அந்த நாய் ராஜாஜி வீதியிலிருந்து அடுத்த வீதிவரை சுற்றி வந்து நின்றுவிட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர்.

தெருவிளக்குகள் எரியவில்லை

நேற்று முன்தினம் திருட்டு நடந்த வீதியில் தெருவிளக்குகள் எதுவும் எரியவில்லை என்றும், நள்ளிரவு 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் நகை, பணம் திருட்டு நடந்த வீட்டிற்கு சிறிது தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த வீதியில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

அவினாசியில் நெருக்கமாக குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்