10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்
மயிலம் அருகே 10 பவுன் நகையை திருடிவிட்டு வீட்டுக்கு தீ வைத்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தை சேர்ந்தவர் முகமதுஆஷிக். இவர் கூட்டேரிப்பட்டில் உள்ள மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக இவர் கூட்டேரிப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமதுஆஷிக் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை முகமதுஆஷிக் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
நகை-பணம் திருட்டு
விசாரணையில், முகமதுஆஷிக் வீட்டை பூட்டிவிட்டு சென்றதை அறிந்த கொள்ளையர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம், பட்டு சேலைகள் ஆகியவற்றை திருடியதும், பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், மெத்தை, இன்வெர்ட்டர், ஏ.சி. உள்ளிட்ட பொருட்களை தீ வைத்து எரித்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
இதன் சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.