தங்க நகை என நினைத்து தாலி கயிற்றை பறித்த கொள்ளையன் - ஆஸ்பத்திரி பெண் ஊழியர் காயம்
தாம்பரம் அருகே தங்க நகை என நினைத்து தாலி கயிற்றை கொள்ளையன் பறித்தான். இதில் காயம் அடைந்த பெண் ஊழியரை அவரின் தோழி ஆஸ்பத்திரி அனுமதித்தார்.;
சென்னை தாம்பரம் அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் சசி (வயது 37). இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். சசி, நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக ஜி.எஸ்.டி. சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்றார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென சசி அணிந்திருந்த தாலி கயிற்றை தங்க நகை என்று நினைத்து பறித்தார். இதில் சசி சிறிது தூரம் இழுத்து செல்லபட்டதால் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தோழி, சசியை அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.