திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையன் - தனது நேரத்தை வீணடித்து விட்டதாக ஆத்திரம்

திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் தனது நேரத்தை வீணடித்து விட்டதாக மூதாட்டியை அடித்து உதைத்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-05 08:47 GMT

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் சரோஜம்மாள் (வயது 75). கணவரை இழந்த இவர், வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு மூதாட்டி சரோஜம்மாள் வீட்டில் தூங்கிக்ெகாண்டிருந்தார். காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், பீரோவை திறந்து நகை, பணத்தை தேடினான். ஆனால் பீரோவில் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் இல்லை. எனினும் அவன் அங்கிருந்த பொருட்களில் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம் என்று நினைத்து தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டான்.

அப்போது பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மூதாட்டி சரோஜம்மாள், வீட்டுக்குள் கொள்ளையன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

ஏற்கனவே வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், நகை-பணம் இல்லாததால் அத்திரத்தில் இருந்த கொள்ளையன், மூதாட்டி சரோஜம்மாளை கத்தியை காட்டி கத்தக்கூடாது என்றும், நகை-பணம் கொடுக்குமாறும் மிரட்டினான். சரோஜம்மாள் தன்னிடம் நகை, பணம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இதனால் மேலும் கோபம் அடைந்த கொள்ளையன், "எனது நேரத்தை வீணடித்து விட்டாய்?" என்று கூறி சரோஜமாளின் முகத்தில் குத்தினான். இதில் நிலைகுலைந்த சரோஜம்மாள் வலியால் துடித்தார்.

எனினும் வெறும் கையுடன் போக விரும்பாத கொள்ளையன், சரோஜாம்மாள் விரலில் அணிந்திருந்த சிறிய மோதிரத்தை கழட்ட முயன்றான். ஆனால் அந்த மோதிரம் இருகலாய் இருந்ததால் அதுவும் வரவில்லை. இதனால் சரோஜம்மாள் வலியால் துடித்தார்.

ஆத்திரத்தின் உச்சம் அடைந்த கொள்ளையன், மோதிரத்தை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மீண்டும் சரோஜம்மாவை தாக்கி விட்டு அங்கிருந்து ஏமாற்றுடன் தப்பி சென்று விட்டான். சரோஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்