'நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர்'
நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம், நரிக்குறவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கின்றனர் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம், நரிக்குறவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் குறவன் காடு பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குறவன் காடு பகுதியில் 80-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பாரம்பரியமாக நாட்டு துப்பாக்கியை கடவுளாக நினைத்து வழிபட்டு வருகிறோம். திருமணம் செய்யும் போது துப்பாக்கி மேல் தாலியை வைத்து வணங்கிய பிறகுதான் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டப்படும்.
உரிமம் வழங்க வேண்டும்
இந்த நிலையில் நாட்டு துப்பாக்கி வைத்து உள்ள அனைவரும் உரிமம் பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையொட்டி நாட்டு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்க பலமுறை முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால் உரிமம் தரமறுக்கின்றனர்.
நாட்டு துப்பாக்கி வைத்து இருந்தால் தான், எங்கள் சமுதாயத்தில் திருமணத்திற்கு பெண் தருவார்கள். துப்பாக்கி இல்லாததால் ஒரு வருடத்தில் 30 திருமணங்கள் தடை பட்டு உள்ளன. எனவே நாட்டு துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் சம்பள உயர்வு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.