டெபாசிட்தான் கேட்டார்கள்: லஞ்சம் கேட்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

எழும்பூர் குழந்தைகள் நல அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க டெபாசிட் தான் கேட்டார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-06-30 15:28 GMT

 சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 28-ந்தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதேபோல, அந்த சிறுவனின் சகோதரிக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு சிறுவனின் தந்தை அழைத்து சென்றுள்ளார். அங்கு, சிகிச்சை அளிக்க ரூ. 1,000 லஞ்சம் கொடுத்ததாகவும் சிறுவனின் தந்தை பரப்பரப்பு புகார் தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்தது.

இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டார்கள் என்பது முற்றிலும் தவறானது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ரூ.1,000 டெபாசிட் வாங்கப்படும். அதன் பிறகு பரிசோதனைகள் தேவைப்பட்டால் ஒவ்வொரு பரிசோதனைகளுக்கும் தனித்தனி கட்டணங்கள் உள்ளது. இது எல்லா மாநிலங்களிலும் நடைமுறையில் இருப்பதுதான்.இந்த உண்மையை உணராமல் திரித்து சொல்வது வேதனை அளிக்கிறது. இந்த மாதிரி தவறான குற்றச்சாட்டுகளால் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்படும். அரசு ஆஸ்பத்திரிகள் நமது ஆஸ்பத்திரி. அவை சிறப்பாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்