அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் மேலாளர் உள்பட 3 பேர் கைது

கருங்கலில் அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-07 17:48 GMT

நாகர்கோவில்:

கருங்கலில் அடகு வைத்த நகையையே மீண்டும் அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.19 கோடி கையாடல் செய்த மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணம் கையாடல்

காஞ்சிரகோடு ஒட்டியால் வலியபண்டாரவிளையை சேர்ந்தவர் ஜீன்சிங் (வயது 38). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றி வருகிறேன். அந்த நிதி நிறுவனத்தின் கருங்கல் கிளை மேலாளராக மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மினி மார்ட்டின் (33), உதவி மேலாளராக மத்தியோட்டை சேர்ந்த சிஞ்சுலா (23), ஊழியராக பனங்காலையை சேர்ந்த அருண் (27) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து நிதி நிறுவனத்திற்கு அடகுக்கு வரும் நகையின் அசல் எடையை விட கூடுதலாக எடையை பதிவு செய்து பணத்தை கையாடல் செய்தனர்.

மேலும் ஏற்கனவே லாக்கரில் வைக்கப்பட்ட நகையை எடுத்து வாடிக்கையாளரின் ஆவணங்களை கொண்டு மீண்டும் அடகு வைத்தும் பணத்தை எடுத்துள்ளனர். இந்த வகையில் நிதிநிறுவனத்தில் இருந்து மொத்தம் ரூ.3.19 கோடியை கையாடல் செய்துள்ளனர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

கைது

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மினி மார்ட்டின், சிஞ்சுலா மற்றும் அருண் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்