நாகர்கோவிலில் கடைக்குள் புகுந்து ரூ.15 லட்சம் துணிகள், ரூ.75 ஆயிரம் திருட்டு; 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் ரூ.75 ஆயிரம் திருட்டு போனதாக கொடுத்த புகாரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள துணிக்கடையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் ரூ.75 ஆயிரம் திருட்டு போனதாக கொடுத்த புகாரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துணிக்கடை
அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ஹரிஹர சுதன் (வயது 29). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் சம்பவத்தன்று காலையில் கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான துணிகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தன. இந்த திருட்டு சம்பவத்தில் பார்வதிபுரத்தை சேர்ந்த ஸ்பர்ஜன் சாமுவேல், மணி செல்வன், ரமேஷ், தனகுருசிங், அஸ்வின் ஜெயக்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 பேர் மீது வழக்கு
இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட துணிக்கடைக்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசாருடன் ஸ்பர்ஜன் சாமுவேல் உள்ளிட்ட 5 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கடைக்காரருக்கும், கட்டிட உரிமையாளருக்கும் இடையே வாடகை பாக்கி தொடர்பான பிரச்சினையில் துணிகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக ஸ்பர்ஜன் சாமுவேல் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.