கைதான போது வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை: போலீசாரை கண்டித்து சாலையில் படுத்து தம்பதி போராட்டம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

கைதான போது வாங்கிய பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறி, போலீசாரை கண்டித்து சாலையில் படுத்து தம்பதி போராட்டம் நடத்தியதால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-27 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் மோரை எவரெட்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவருக்கும் முன்விரோத தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக முருகன், அவரது மனைவி ஆர்த்தி உள்பட 4 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இந்த நிலையில் முருகன் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார்.

தொடர்ந்து அவர் நேற்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றார். அப்போது முருகன், தன்னை கைது செய்யும் போது கொடுத்த பணம், மோதிரத்தை திருப்பி தருமாறு அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் இது சம்பந்தமாக எங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்.

மறியல்

இந்த நிலையில் முருகனின் மனைவி ஆர்த்தியும் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். போலீசார் ஏற்கனவே இவர் மீது வழக்கு உள்ளதால், அவரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசாரை கண்டித்து முருகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி திடீரென கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்துக் கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். பின்னர் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த மறியலால் நெல்லிக்குப்பத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மீது புகார்

இதைத்தொடர்ந்து ஆர்த்தி நேற்று மாலை கணவர் முருகனுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அதில், கஞ்சா போதையில் குத்தாட்டம் போட்டவர்களை தட்டிக்கேட்ட எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இது பற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், அவர்கள் வாங்கவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த புகாரை பெற்று எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யும் போது எனது கணவரிடம் இருந்து 5 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் மோதிரத்தை வாங்கினர். ஆனால் இதுவரை அதை திருப்பி தரவில்லை. இது பற்றி கேட்ட எங்களை போலீசார் தகாத வார்த்தையால் திட்டுகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்