வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகை கொள்ளை

நெல்லையில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 25 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.

Update: 2023-07-18 22:28 GMT

நெல்லை டவுன் பெரியதெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி கோமதி (வயது 82). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் ராமசாமி, தனது மகனுடன் உயிரிழந்தார். இதனால் கோமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் கோமதி வீட்டில் இருந்தார். அப்போது, வீடு புகுந்த மர்ம நபர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். திடீரென்று அந்த நபர் வீட்டின் முன்பக்க கதவை அடைத்துவிட்டு, அங்கிருந்த தலையணையை எடுத்து கோமதி முகத்தில் வைத்து அமுக்கினார். மேலும், அவர் வைத்திருந்த நகைகளை தரும்படி மிரட்டினார். திடீரென கோமதியை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 25 பவுன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்துவிட்டு வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர் இரவு நேரத்தில் மூதாட்டிக்கு உதவியாக இருக்க வரும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை தட்டினர். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பின்பக்கம் வழியாக வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு லேசான காயம் அடைந்து கிடந்த கோமதியை மீட்டனர். அவர் நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரஷிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்