தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய கண்மாயில் செத்து கிடக்கும் மீன்கள்

நயினார்கோவில் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்ட தால் மீன்கள் இறந்து கிடக்கின்றன.

Update: 2023-09-20 18:45 GMT

நயினார்கோவில், 

நயினார்கோவில் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் இன்றி வறண்ட தால் மீன்கள் இறந்து கிடக்கின்றன.

சரணாலயம்

ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் நயினார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் கிராமம். இங்கு பறவைகள் சரணாலயம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இருந்து ஏராளமான பறவைகள் வரத்தொடங்கும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தில் நீர்நிலையில் வளர்ந்து நிற்கும் மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இருக்கும். அதன் பின்னர் கோடைகால சீசன் தொடங்கும் போது மார்ச் மாதத்தில் அனைத்து பறவைகளும் குஞ்சுகளுடன் திரும்பி சென்று விடும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் போதிய மழை பெய்யாததால் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திலும் தண்ணீர் இல்லாத நிலை இருந்தது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெய்த மழையால் ஓரளவு மட்டுமே தண்ணீர் இருந்தது. இதனால் இனப்பெருக்கத்திற்காக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கும் அதிகமான பறவைகள் வரவில்லை.

செத்து கிடக்கும் மீன்கள்

தற்போது பறவைகள் சரணாலய கண்மாயில் உள்ள நீர்நிலை முழுமையாக வற்றிய நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்து வருகின்றது. கண்மாய் வறண்டு போனதால் கெண்டை, கெலுத்தி கெழுது உள்ளிட்ட பல மீன்களும் வெயிலின் வெப்பம் தாங்காமல் இறந்த நிலையில் கண்மாய் பகுதியில் கிடக்கின்றன.

இதேபோல் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் மற்றும் மங்கலம் கண்மாயிலும் தண்ணீர் வற்றிய நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஏராளமான மீன்கள் இறந்த நிலையில் கண்மாய் கரை பகுதியில் கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்