மதுரையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
மதுரையில் இடி, மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது.
மதுரையில் இடி, மின்னலுடன் நேற்று பலத்த மழை பெய்தது.
இடி, மின்னலுடன் மழை
மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இரவிலும் அதே வெப்பசலனம் காணப்பட்டதால், மதுரை மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்றும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் இரவு 7 மணியளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டது.
அதன்படி பலத்த இடி மின்னலுடன் நகர் பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையானது, சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோல் நகரின் முக்கிய வீதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
மரங்கள் முறிந்தன
மழையின் காரணமாக, விராட்டிபத்து பகுதியில் மரம் முறிந்து விழுத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதுபோல், மீனாம்பாள்புரம், ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.
மழையின் காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.