கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நெடுஞ்சேரியை சேர்ந்த சரஸ்வதி தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க வந்தவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறுகையில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது கோவிலில் பணிக்காக தனது மகன் ராஜாவை அர்ச்சகர் ஒருவர் அழைத்து சென்ற இடத்தில் அவர் இறந்ததாகவும், இது தொடர்பாக அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், தனது மகன் சாவிற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவர்களது திடீர் தர்ணாவால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பானது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண்
இதேபோல 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் மனு அளிக்க வந்தார். அவர் தனது காதலன் தன்னை காதலித்து, ஆசை வார்த்தைக்கூறி உடல் உறவு கொண்டதில் கர்ப்பமானதாகவும், திருமணத்திற்கு மறுத்த நிலையில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்த பின், திருமணம் செய்ததாகவும், தற்போது 1 மாதத்தில் பெண் குழந்தை உள்ள நிலையில், தன்னை தனியாக தவிக்க விட்டு சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
வாகவாசல் ஊராட்சிராசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தங்கள் பகுதியில் உள்ள கண் திறந்த நாயகி அம்மன் கோவில் முறைகேடுகள் தொடர்பாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுப்பாதைக்கு வழிவகுத்து தரவும் கூறியிருந்தனர்.
412 மனுக்கள்
இதேபோல மணமேல்குடி அருகே புதுவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை ஆக்கிரமித்துள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய கல்வி பயிலும் 5 நபர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மேக்னிபயர் கருவியும் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.13,500 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன் பேசியும் என 6 பயனாளிக்கு மொத்தம் ரூ.63,500 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.